காங்கிரஸ் கூட்டணியின் பெயர் குறித்து மத்திய மந்திரி ஷோபா கடும் விமர்சனம்

இந்தியா என்ற சொல் ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட கிழக்கிந்திய நிறுவனம் என்று மத்திய மந்திரி ஷோபா கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.;

Update: 2023-07-19 18:45 GMT

மங்களூரு-

இந்தியா என்ற சொல் ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட கிழக்கிந்திய நிறுவனம் என்று மத்திய மந்திரி ஷோபா கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

உடுப்பியில் மத்திய மந்திரி ஷோபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிழக்கிந்திய நிறுவனம்

''இந்தியா'' என்ற சொல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த கிழக்கிந்திய நிறுவனத்துடன் தொடர்புடையது. இந்த கிழக்கிந்திய நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு பெயர் பெற்றது. தற்போது பிரதமர் மோடியின் முயற்சிகளை எதிர்த்து புதிய கிழக்கிந்திய கம்பெனிகள் தோன்றியிருக்கிறது. யார் ஒன்று சேர்ந்தாலும் பிரதமர் மோடியையோ, பா.ஜனதா கட்சியையோ வீழ்த்த முடியாது. இந்தியா என்பது ஒரு நாடு. அந்த நாட்டின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது.

இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நரேந்திர மோடிக்கு உள்ளூர் ஆதரவு பெருகி வருகிறது. குடும்ப அரசியலுக்கு மோடி எதிரானவர். அஜித்பவார் பா.ஜனதாவில் சேர்ந்ததும், அதற்கு ஒரு உதாரணம். குடும்ப அரசியலில் வெறுப்படைந்துபோய் அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். அஜித்பவாருக்கு பா.ஜனதா எப்போதும் உறுதுணையாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ள பா.ஜனதா அரசு தயாராக உள்ளது.

உத்தரவாத திட்டங்கள் தோல்வி

காங்கிரஸ் அறிவித்துள்ள உத்தரவாத திட்டங்கள் நாடாளுமன்ற தேர்தலை முன் வைத்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எப்படி காங்கிரஸ் சமாளிக்க போகிறது என்பது தெரியவில்லை. அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்க முடியவில்லை. இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை ஆகிய திட்டங்கள் தோல்வியடைந்துவிடும்.

சந்தேகட்டேயில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பேசினேன். மேலும் திறமையான அதிகாரிகளை நியமிக்கும்படி கேட்டு கொண்டேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்