அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக கருதுகிறார், ராகுல்காந்தி - மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்

தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார். அவருக்கு எதிராக கோர்ட்டு எடுத்த நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு தொடர்பில்லை என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.;

Update: 2023-03-27 21:38 GMT

மன்னிப்பு கேட்க மறுப்பு

மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது, கோர்ட்டு எடுத்த நடவடிக்கை. சட்டப்படி, அவரது எம்.பி. பதவியை மக்களவை பறித்துள்ளது. இந்த நீதித்துறை சார்ந்த, சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்கள் சோனியாகாந்தி குடும்பத்தை நீதித்துறையை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.

சூரத் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு எல்லா வாய்ப்புகளும் அளித்துள்ளது. மன்னிப்பு கேட்கக்கூட வாய்ப்பு அளித்தது. ஆனால், தனது குடும்பத்துக்கு எதிராக தீர்ப்பு அளிக்க கோர்ட்டுக்கு துணிச்சல் இருக்காது என்று கருதி, அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.

தொடர்பு இ்ல்லை

சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதில் மத்திய அரசுக்கோ, பா.ஜனதாவுக்கோ தொடர்பில்லை. சோனியாகாந்தி குடும்பம், தன்னை உயர்தர வர்க்கம் என்றும், அரசியல் சட்டத்தை விட உயர்ந்தது என்றும் கருதுகிறது. ஒரு எம்.பி.யின் பதவி பறிப்பு பிரச்சினையில், மக்களவைக்கு விருப்ப உரிமை அதிகாரம் எதுவும் கிடையாது. ஜனநாயகம், அச்சுறுத்தலில் இருப்பதாக கூறுபவர்கள்தான், நீதித்துறை நடவடிக்கைக்கு எதிராக தெருமுனை போராட்டம் நடத்துவதன் மூலம், ஜனநாயகத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

சாவர்க்கர் பற்றி அறிய வேண்டுமா?

நாட்டை இழிவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் ராகுல்காந்தி விட்டுவிடுவது இல்லை. ஜனநாயகத்தின் பல்வேறு தூண்களுக்கு சவால் விட்டு வருகிறார். கோர்ட்டு மன்னிப்பு கேட்க வாய்ப்பு அளித்தும் அதை பயன்படுத்தாமல் அவர் ஆணவமாக நடந்து கொண்டார். ஜனநாயக நடைமுறையை விட தன்னை உயர்வாக கருதுவதால், அவர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.

தேசபக்தரும், சுதந்திர போராட்ட வீரருமான வீர சாவர்க்கரை ராகுல்காந்தி இழிவுபடுத்தி வருகிறார். தான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

சாவர்க்கரை பற்றி அவர் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்பினால், அந்தமான் ஜெயிலுக்கு சென்று, சாவர்க்கர் யார்? அவர் ெசய்த தியாகங்கள் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்