தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட மந்திரி தகவல்

தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட மந்திரி கூறினார்.

Update: 2022-12-17 00:00 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று கூடியவுடன், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சில நாட்களாக தேச பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினையை எழுப்ப முயன்று வருவதாகவும், ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.அதற்கு சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், சபைத்தலைவரை குற்றம் சாட்டக்கூடாது என்று கூறினார்.

சீன படைகளுடன் நடந்த மோதல், விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று 8 நோட்டீஸ்கள் அளித்தனர். 267-வது விதிப்படி, சபை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அந்த நோட்டீஸ்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், சபைத்தலைவரின் பரிசீலனையில் அவை இருப்பதாக கூறினார். அதை ஏற்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபையை பகல் 12 மணிவரை ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

கருத்து கணிப்பு

மக்களவை கேள்வி நேரத்தில், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கருத்து கணிப்பு மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்த தடை விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ''கருத்து கணிப்புக்கு தடை விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை'' என்று கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், பி.எஸ்.என்.எல்.லுக்கு எப்போது 5ஜி சேவை ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ரஜினி பட்டீல் கேட்டார். அதற்கு பதில் அளித்த மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பணம் கொழிக்கும் பசுவாக காங்கிரஸ் அரசு கருதியதாகவும், 4ஜி ஒதுக்காதது குறித்து காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ஆயுஷ்மான் பாரத்

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 50 கோடி பேருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான சுகாதார காப்பீடு அளிக்கப்படுகிறது. இதுவரை 22 ஆயிரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் 1,500 தனியார் ஆஸ்பத்திரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்தர்சிங் ஹூடா, விளைபொருட்களின் குறைந்தபட்ச விலை தொடர்பாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது? என்று கேட்டார்.

அதற்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழு ஆய்வு செய்து வருகிறது. அதில், விவசாய சங்கத்தின் பிரதிநிதி இடம்பெற்றுள்ளார்.

காங்கிரஸ் பொய் அரசியல் செய்து வருகிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக இரட்டை அணுகுமுறையை பின்பற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்