கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக தொடங்க மக்கள் பங்களிப்பு முக்கியமானது: சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் பல மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
மழைக்காலம் தொடங்கவுள்ளதை அடுத்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் , தமிழகம், டெல்லி , பீகார் உட்பட பல மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமுதாயங்களையும் ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களைத் தொடங்குமாறு 13 மாநிலங்களுக்கு (உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மராட்டியம், பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு) டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம்" என கூறினார்.