பாஜக அரசு வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்று ராகுல்காந்தி கூறினார்.;
சிலிகுரி,
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் நடைபயணம் மேற்கு வங்காளத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள சிலிகுரியில் நேற்று பாதயாத்திரையாக சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-
வங்காளத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இந்த மாநிலம்தான் சுதந்திரப் போராட்டத்தின்போதே சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. தற்போதைய சூழ்நிலையில் வெறுப்புக்கு எதிராக போராடுவதற்கும், தேசத்தை பிணைப்பதற்கும் வழி காட்டுவது வங்காளம் மற்றும் வங்காளிகளின் கடமை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் இதை எழுப்பவில்லை என்றால், மக்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள்.
ஆயுதப்படைக்கு குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிவீரர்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஆயுதப்படையில் சேர விரும்பிய இளைஞர்களை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி உள்ளது.நாடு முழுவதும் வெறுப்பும் வன்முறையும் பரவி வருகிறது. இது எந்த நோக்கத்திற்கும் உதவாது. வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக, நம் இளைஞர்களுக்கு அன்பையும், நீதியையும் பரப்புவதற்கு நாம் உழைக்க வேண்டும்.
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. மாறாக ஏழைகள் மற்றும் இளைஞர்களின் நலன்களை புறக்கணிக்கிறது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.