'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு அறிவித்துள்ள 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிராந்தியம் மற்றும் சாதி அடிப்படையில் வீரர்களை தேர்ந்தெடுத்து அமைக்கப்படும் படைப்பிரிவுகளில், இத்திட்டத்தால் மாற்றம் ஏற்படும் என்றும், குறுகிய 4 ஆண்டுகால பணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வது சரியல்ல என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
ராணுவத்தில் இளைஞர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், பல்வேறு படைப்பிரிவுகளில் மாறுதல் ஏற்படும் என்று கூறுகிறார்கள். அப்படி எந்த மாறுதலும் ஏற்படாது.
ஏனென்றால் சிறப்பான அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால், அதன் முக்கியத்துவம் அதிகரிக்கவே செய்யும். படைப்பிரிவுகளிடையே இணக்கம் அதிகரிக்கும். வரும் ஆண்டுகளில், தற்போதைய ஆள் தேர்வை போல், 3 மடங்கு ஆட்கள் 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறுகிய கால பணியால், படைகளின் செயல்திறன் பாதிக்கப்படும் என்றும் சிலர் கூறுகிறார்கள். குறுகிய கால பணி என்பது பல நாடுகளில் இருப்பதுதான். எனவே, இது ராணுவத்துக்கு நன்கு பலன் அளித்த சிறந்த முறை ஆகும்.
முதல் ஆண்டில் தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்கள் எண்ணிக்கை, ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 3 சதவீதம் மட்டுமே. 4 ஆண்டுகளின் இறுதியில், ஒவ்வொருவரது செயல்திறன் பரிசோதிக்கப்பட்ட பிறகே அவர்கள் நிரந்தர பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
எனவே, ராணுவத்துக்கு நன்கு சோதிக்கப்பட்ட வீரர்கள்தான் கிடைப்பார்கள். பெரும்பாலான நாட்டு ராணுவங்கள், இளைஞர்களை சார்ந்தே உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக, ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் ராணுவ வீரர்கள், சமுதாயத்துக்கு ஆபத்தாக உருவெடுப்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இது ராணுவத்தை அவமதிக்கும் செயல். 4 ஆண்டுகள் சீருடை அணிந்த இளைஞர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு கடமையாற்ற உறுதி பூண்டிருப்பார்கள். ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கூட சமூக விரோதிகளாக மாறியதாக எந்த முன்னுதாரணமும் இல்லை.
4 ஆண்டு பணியின் முடிவில், ஒவ்வொரு வீரருக்கும் சேவை நிதி தொகுப்பில் இருந்து தலா ரூ.11 லட்சத்து 71 ஆயிரம் வழங்கப்படும். அது அவர்களின் நிதி சுதந்திரத்துக்கு உதவும். அதைக்கொண்டு தொழில் முனைவோர் ஆகலாம்.
தொழில் முனைவோர் ஆக விரும்புபவர்களுக்கு வங்கிக்கடனும் அளிக்கப்படும். மேற்கொண்டு படிக்க விரும்புபவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு சமமான சான்றிதழும், உயர் படிப்புக்கான புத்தாக்க பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்கள், 10-ம் வகுப்பு மட்டும் முடித்திருந்தால், அவர்கள் 12-ம் வகுப்பு சான்றிதழ் பெற தேசிய திறந்தநிலை பள்ளி நிலையம் உதவ முன்வந்துள்ளது.
இதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்குகிறது. இந்த சான்றிதழ், நாடு முழுவதும் வேலைவாய்ப்புக்கும், உயர்கல்விக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.