மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க விரும்பவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
8-வது நாளாக இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
மணிப்பூர் விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் கலைந்து சென்றன. விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க விரும்பவில்லை. எதிர்கட்சியினரின் செயல் வருத்தம் அளிக்கிறது. மணிப்பூர் அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) அரசியல் பிரச்சினை மட்டுமே.
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வெறும் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் அதை பற்றி அவையில் விவாதித்திருப்பார்கள் என்றார்.