டெல்லியில் தெளிவற்ற வானிலை; விமான, ரெயில் சேவை பாதிப்பு
டெல்லியில் தெளிவற்ற வானிலையால் பல்வேறு விமானங்கள் மற்றும் ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி,
வடஇந்தியா முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது. இதனால், பல பகுதிகளில் பனிப்படலம் சூழ்ந்தது போன்று காணப்படுகிறது. இதனால், தெளிவற்ற வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வருகிற 22-ந்தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். இந்த நிலை வருகிற 25-ந்தேதி வரை நீடிக்கும்.
இதனால், 23, 24 ஆகிய தேதிகளில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சமவெளி பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்து காணப்படும் என்று தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, இன்று முதல் 20-ந்தேதி வரையில் வடமேற்கு இந்தியாவில் மேற்கு புறத்தில் இருந்து பலத்த குளிர் காற்று வீச கூடும். இதனால், வடமேற்கு இந்திய பகுதிகளில் குளிரலை பரவல் காணப்படும். அது நாளை (19-ந்தேதி) உச்சம் தொடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வருட தொடக்கத்தில் இருந்து காணப்படும் கடும்பனி, குளிர்காற்று மற்றும் தெளிவற்ற வானிலையால் விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல்வேறு விமானங்களும் கடும் பனியால் இன்று காலதாமதமுடன் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று உறைபனியால் 6 ரெயில்களின் சேவையில் இன்று காலதாமதம் ஏற்படும் என வடக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. ரெயில்களின் இயக்கத்தில் 1 மணிநேரம் வரை காலதாமதம் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.