போரை தொடங்கிய உக்ரைன்... ரஷிய வெளியுறவு மந்திரி பேச்சால் எழுந்த சிரிப்பலை
டெல்லியில் ரைசினா பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில் ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ் போரை தொடங்கியது உக்ரைன் என கூறியதும் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.;
புதுடெல்லி,
டெல்லியில் ரைசினா பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், பல்வேறு வெளிநாட்டு மந்திரிகள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் சந்தித்து வரும் பெரிய சவால்களை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் (வயது 72) இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, உக்ரைனிய மக்களை பயன்படுத்தி எங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரை, நாங்கள் தடுத்து நிறுத்த முயற்சித்து வருகிறோம்.
உண்மையில் ரஷியாவின் ஆற்றல் கொள்கை உள்ளிட்ட கொள்கைகளின் மீது அது தாக்கம் ஏற்படுத்தியது என கூறினார். அவர், போரை தொடங்கியது உக்ரைன் என கூறியதும் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையும், முணுமுணுப்பும் எழுந்தது.
எனினும், இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது மேற்கத்திய நாடுகளின் தலையீடுகள் மற்றும் அவற்றின் இரட்டை நிலைப்பாடுகள் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து கைதட்டுகளும் எழுந்தன.
அவர் கூறும்போது, பூமியில் எந்த இடத்திலும், தனது தேசிய நலனிற்காக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது என்பதனை நீங்கள் நம்பியாக வேண்டும்.
யுகோஸ்லேவியாவில் அவர்கள் செய்தது போன்று... ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அவர்கள் செய்தது போல்... நீங்கள் அவர்களிடம் எந்த கேள்விகளையும் ஏன் கேட்பதில்லை? என நிருபரிடம் எதிர்கேள்வி எழுப்பினார்.
இதனால், உக்ரைனில் நடந்து வரும் போரில், சொந்த நலன்களுக்காக மேற்கத்திய நாடுகள் எப்படி வேறுபட்ட எதிர்வினைகளை வெளிப்படுத்தி வருகின்றன என்பது பற்றி, மேற்கத்திய நாடுகள் அல்லாத உலக நாடுகள் எப்படி பார்க்கின்றன? என்பதும் இந்நிகழ்ச்சியின் வழியே தெரிய வந்தது.