130 கோடி இந்தியர்கள் சார்பாக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின், லிஸ் டிரஸ் முதன்முறையாக பிரதமர் மோடியுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.;

Update: 2022-09-10 14:47 GMT

லண்டன்,

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின், லிஸ் டிரஸ் முதன்முறையாக இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் கூறினார்.

இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்தியா - இங்கிலாந்து இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் பற்றி விவாதித்தார். மேலும், இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு உறவுக்கு, புதிய பிரதமர் லிஸ் டிரஸ் முன்னர் வர்த்தகச் செயலர் மற்றும் வெளியுறவுச் செயலாளராக இருந்த போது அவர் அளித்த பங்களிப்பை மோடி பாராட்டினார்.

இரு தலைவர்களும் 2030ம் ஆண்டு விரிவு திட்டத்தை அமல்படுத்துவது பற்றியும், வர்த்தக பேச்சுவார்த்தைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் உறவுகள் ஆகியன குறித்தும் விவாதித்தனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.

130 கோடி இந்தியர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடியின் இதயப்பூர்வமான இரங்கலுக்கு பிரதமர் லிஸ் டிரஸ் நன்றி தெரிவித்தார்.இங்கிலாந்து மற்றும் இந்திய மக்கள் உணர்ந்த துயரத்தை இருநாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர், மேலும் ராணியின் வாழ்நாள் சேவைக்கு மரியாதை செலுத்தினர்.

இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு உறவின் முக்கியத்துவம் குறித்து இருநாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.எதிர்காலத்தில் நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்