ஆதார் எண்ணை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை
ஆதார் எண்ணை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.;
புதுடெல்லி,
ஆதார் எண்ணை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரும் போதும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கைப்பேசி எண், வங்கி கணக்கு எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆதார் எண்ணை பகிரும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பல்வேறு வகையான பலன்கள், சேவைகளை பெற பொதுமக்கள் விருப்பப்படி ஆதாரை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். ஆனால் வங்கி விவரங்கள், பான் கார்டு உபயோகங்களை போன்று ஆதார் அட்டையையும் எண்ணையும் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இணைய இணைப்பு அல்லது இணைய இணைப்பு இல்லாமல் அடையாள சரி பார்ப்புக்கான ஒரே ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது. மின்னணு முறையில் தங்களுடைய அடையாள சான்றுகளை சரி பார்க்க ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். அதே சமயம் எந்தவொரு நிறுவனத்துடனும் ஆதார் எண்ணை பகிரும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொது தளத்தில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம். ஆதார் வைத்திருப்பவர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் அதற்கான ஓ.டி.பி.யையும் அளிக்க வேண்டாம். ஆதார் எண்ணை பகிராமலும் வசதிகளை பெற முடியும்.
குறிப்பிட்ட இடங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவதை விரும்பாத பட்சத்தில், விர்ச்சுவல் ஐடியை (வி.ஐ.டி.-மெய்நிகர் அடையாளம் காட்டி) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஐ.டி.யை உருவாக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) வழங்குகிறது. இதை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் 'மைஆதார்' போர்ட்டல் வழியாக ஒருவர் விர்ச்சுவல் ஐடி எளிதாக உருவாக்கி, அங்கீகாரத்தை ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பின்னர் இந்த 'வி.ஐ.டி.'யை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் 'லாக்கிங்' செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு ஆதாரை பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், லாக்கிங் செய்து கொள்ளலாம். தேவைபடும் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான, மென்மையான, விரைவான அங்கீகார அனுபவத்தை உறுதி செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.
ஆதார் கோரும் நிறுவனங்கள், அது எந்த நோக்கத்துக்காக எடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிடப்படும்படியும் ஒப்புதலை பெறவும் கூறப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெறும் நிறுவனங்கள், ஆதார் சட்டத்தின் விதிகள், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில் பயன்படுத்தவும், தரவுகளை வைத்து கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.