உகாண்டாவை சேர்ந்த வாலிபர் நாடு கடத்தல்

பெங்களூருவில் போலி விசா, பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்த உகாண்டா நாட்டை சேர்ந்த வாலிபர் நாடு கடத்தப்பட்டார். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Update: 2022-07-29 15:49 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் போலி விசா, பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்த உகாண்டா நாட்டை சேர்ந்த வாலிபர் நாடு கடத்தப்பட்டார். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

உகாண்டா வாலிபர் கைது

பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு மண்டலத்தில் பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த போஸ்கி காவேஸ்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 2005-ம் ஆண்டு உகாண்டாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பிறகு, அவரது விசா காலம் முடிந்த பின்பும் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தார்.

ஏற்கனவே பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டு போஸ்கி 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்து இருந்தார். அதன்பிறகும், அவர் பெங்களூருவில் தங்கி இருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளுவது, பெங்களூருவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு போலி பாஸ்போர்ட்டு, விசா பெற்றுக் கொடுப்பது, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு சட்ட உதவி செய்வதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் போஸ்கி ஈடுபட்டு வந்தார்.

நாடு கடத்தல்

பெங்களூருவில் 15 ஆண்டுக்கும் மேலாக தங்கி இருந்த அவர், இதற்காக போலி பாஸ்போர்ட்டு, விசா தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு போஸ்கி பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு போஸ்கியை பானசாவடி போலீசார் கைது செய்து மத்திய உள்துறையின் அனுமதியுடன் நாடு கடத்தினர். எக்காரணத்தை கொண்டும், அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வராதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போஸ்கி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 24 பெண்கள் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டுகள், 2 ஆண்களுக்கு உரிய பாஸ்போர்ட்டு, ஒரு மடிக்கணினி, செல்போன்கள் பிற ஆவணங்கள் சிக்கியது. பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த போஸ்கிக்கு வாடகைக்கு வீடு கொடுத்ததால், அந்த வீட்டு உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார். பேட்டியின் போது கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்