முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா: கவர்னர் ஏற்பு
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஏற்றுக்கொண்டார்
மும்பை,
சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று அதிகாலை உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் கவர்னரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பு திட்டமிட்டபடி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே தனது ராஜினாமா முடிவை உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை என்று கவர்னருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்ததுடன், தனது ராஜினாமா கடிதத்தையும் கவர்னருக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் மராடிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஏற்றுக்கொண்டார். மேலும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் முதல்-மந்திரியாக தொடருமாறு கவர்னர் கேட்டுக் கொண்டதாக ராஜ் பவன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து, உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவுடன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாலையில் மந்திரி சபை கூட்டத்தை கூட்டி, இதுநாள் வரை ஒத்துழைப்பு கொடுத்த தனது மந்திரி சகாக்களுக்கும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால் சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை கைவிட்டு விட்டதாக வேதனை தெரிவித்தார்.