அமீபாவைப் போன்றது தேசிய ஜனநாயக கூட்டணி..!! உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

தேசிய ஜனநாயக கூட்டணி அமீபாவை போன்றது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.;

Update: 2023-08-27 18:29 GMT

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடந்தது. இந்த நிலையில் 3-வது கூட்டம் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த பல முதல்-மந்திரிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்காக திட்டமிடப்பட்ட நாள் நெருங்கி வரும் நிலையில் மராட்டியத்தை சேர்ந்த கூட்டணி தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமீபாவை போன்றது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில் பேரணி ஒன்றில் பேசிய அவர், "இந்தியா கூட்டணியில் தேசிய கட்சிகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவும் துரோகிகளாக உள்ளனர். அவர்கள் தங்களது கட்சியிலிருந்து பிரிந்து சென்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். தற்போது இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அமீபாவைப் போன்றது. அமீபாவுக்கு உறுதியான வடிவமும், அளவும் கிடையாது. அதுபோல இந்த கூட்டணிக்கும் உறுதியான வடிவமும், அளவும் கிடையாது. இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) வீழ்த்தும்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்