சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே அணிக்கு கோர்ட் அனுமதி

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறவில்லை.

Update: 2022-09-23 11:21 GMT

மும்பை,

தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தான் மறைந்த பால்தாக்கரே சிவசேனா கட்சியை தொடங்கினார். மேலும் ஆண்டுதோறும் அந்த மைதானத்தில் தான் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து சிவசேனா தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறவில்லை. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணி, ஷிண்டே அணி என 2 பிரிவாக உடைந்தது.

இதில் கடந்த மாதம் 22-ந் தேதி உத்தவ் தாக்கரே அணியினர் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சியிடம் அனுமதி கேட்டனர். இதேபோல 30-ந் தேதி ஷிண்டே அணியினரும் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். இதனால் பொதுக்கூட்டம் நடத்த யாருக்கு அனுமதி கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த உத்தவ், ஷிண்டே என இருதரப்புக்கும் அனுமதி வழங்க மும்பை மாநகராட்சி நேற்று மறுத்து விட்டது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட், உத்தவ் தாக்கரே அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்