கன்னையாலால் படுகொலை : கைதானவர்களில் ஒருவர் பா.ஜ.க. உறுப்பினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி பிரிவு தலைவர் பவன் கேரா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.;

Update: 2022-07-02 10:07 GMT

Image tweeted by Congress leader Pawan Khera

புதுடெல்லி

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக கைதானவர்களில் ஒருவர் பா.ஜ.க. உறுப்பினர் என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையை மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் சில சந்தேகங்களை முன்வைத்துள்ளது. கைதானவர்களில் ஒருவரான ரியாஸ் அத்தாரி ராஜஸ்தான் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர். அதனாலேயே பா.ஜ.க. இந்த வழக்கை அவசர அவசரமாக என்ஐஏ விசாரணைக்கு மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி பிரிவு தலைவர் பவன் கேரா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கன்னையா லாலை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இருவரில் ரியாஸ் அத்தாரி பிரதான குற்றவாளியாக கருதப்படுகிறார். இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவில் இருக்கிறார். அதற்கான புகைப்பட ஆதாரம் மற்றும் பேஸ்புக் பதிவு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ..

ரியாஸ் அத்தாரி, பா.ஜ.க. தலைவர்கள் இர்ஷத் சயின்வாலா, முகமது தாஹிர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ராஜஸ்தான் பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரியாஸ் அத்தாரி தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.

இர்ஷத் சயின்வாலா கடந்த 2018 நவம்பர் 30ல் பகிர்ந்த பேஸ்புக் பதிவு, முகமது தாஹிர் 3 பிப்ரவரி 2019, 30 நவம்பர் 2018, 27 அக்டோபர் 2019, ஆகஸ்ட் 10 2021, நவம்பர் 28 2019 மற்றும் இன்னும் பிற பதிவுகளில் அத்தாரி பா.ஜ.க. தலைவர்களுடன் நெருக்கமாக பழகிவந்தது அம்பலமாகியுள்ளது.

உதய்பூர் சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காக்கும் மவுனம், ஒருவேளை நாட்டில் மதமோதல்களை உருவாக்க பாஜக முயல்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

அதேபோல் பாஜக தனது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் மூலம் நாட்டை பிரித்தாள முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. அத்தாரிக்கும் பா.ஜ.க.வுக்குமான தொடர்பை எல்லாம் மூடி மறைக்கவே மத்திய அரசு அவசர அவசரமாக வழக்கு விசாரணையை என்ஐஏக்கு மாற்றியதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறு பவன் கேரா பேசியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க. செய்தி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டரில், இதுபோன்ற போலி செய்தியை நீங்கள் (காங்கிரஸ்) பரப்புவது தொடர்பாக எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை.

ரியாஸ் அத்தாரி போன்றோரின் ஊடுருவல் காங்கிரசில் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சி செய்து ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு சமமானது. பயங்கரவாதம், தேசப் பாதுகாப்பு விஷயங்களில் இதுபோன்ற முட்டாள் தனங்களை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்