உதய்பூர் தையல்காரர் கொலையை கண்டித்து மூடிகெரேயில் முழுஅடைப்பு போராட்டம்

உதய்பூர் தையல்காரர் கொலையை கண்டித்து சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் முழுஅடைப்பு போராட்டடம் நடந்தது. ஆனால் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

Update: 2022-07-01 15:31 GMT

சிக்கமகளூரு;

உதய்பூர் தையல்காரர் கொலை

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த கண்ஹைலால் என்ற தையல்காரர் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில் உதய்பூர் தையல்காரர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கண்ஹைலால் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கண்ஹைலால் கொலையை கண்டித்து சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

முழுஅடைப்பு

அதன்படி மூடிகெரேயில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. டவுனில் உள்ள வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்தனர். ஆனால் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கின. இந்த நிலையில் மூடிகெரே டவுனில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் மதியம் 12 மணி அளவில் பஸ் நிலையத்தில் இருந்து எம்.ஜி. ரோடு வழியாக ஊர்வலம் செல்ல முயன்றனர். ஆனால் இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தியவர்கள், கண்ஹைலால் கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பலத்த பாதுகாப்பு

இந்த முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி மூடிகெரே டவுனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் முழுஅடைப்பு அமைதியாக நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்