சுங்கச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு.. தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்து 2 பேர் பலி

6 மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.;

Update: 2024-04-03 08:22 GMT

தாட்டியா:

மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டம், சிருலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், திடீரென சுங்கச்சாவடி ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இதனால் பயந்துபோன ஊழியர்கள் நாலாபுறமும் தப்பி ஓடினர். சிலர் பக்கத்தில் உள்ள விவசாய வயல்களை நோக்கி ஓடினார்கள். அவர்களில் இரண்டு பேர் அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டனர்.

மத்திய பிரதேசம்-உத்தர பிரதேசம் எல்லையில் இந்த சுங்கச்சாவடி உள்ளது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதல் சம்பவம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

6 மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதாக சிருலா காவல்நிலைய பொறுப்பாளர் நிதின் பார்கவா தெரிவித்தார்.

குற்றவாளிகள் அங்கு 15 நிமிடங்களுக்கு சுமார் 30 ரவுண்டுகள் வரை சுட்டுள்ளனர் என்றும், கிணற்றில் இறந்து கிடந்தவர்களின் உடல்கள் இன்று காலையில் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நிதின் பார்கவா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்