நொய்டா இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுவதற்கு முன் அப்பகுதியில் உலாவும் 40 தெருநாய்களை அப்புறப்படுத்திய தொண்டு நிறுவனங்கள்!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் இன்று தகர்க்கப்பட்டன.;
நொய்டா,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
இதனால் அந்த இரு கட்டிடங்களிலும் அவற்றைச் சுற்றியும் வசிக்கும் தெருநாய்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் தங்குமிடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி பல தன்னார்வலர்கள் இந்த சமூக சேவையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 40 தெருநாய்கள் அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலும் அந்த பகுதிகளை சுற்றி வாழும் பறவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டுமென்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும் உள்ளன.
இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க சுப்ரீம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கோர்ட்டு உத்தரவின் பேரில் இன்று கட்டிடங்களைத் தகர்க்க வேண்டும். அதற்கு முன்னர், அந்தப் பகுதியில் உள்ள பறவைகளைக் காப்பாற்றுவதற்காக, போலியாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, குண்டுகளை வெடிக்க வைத்தும் பறவைகளை அப்பகுதிகளிலிருந்து விரட்ட வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் கட்டிடங்களைத் தகர்க்கத் திட்டமிடப்பட்டதை கருத்தில் கொண்டு சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்களுக்கு அருகிலுள்ள இரண்டு வீட்டுவசதி சங்கங்களில் வசிக்கும் சுமார் 5,000 மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரட்டை கோபுர வளாகத்திற்கு வெளியே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டன. மேலும் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தற்காலிகமாக அப்பகுதியை காலி செய்யுமாறு அறிவுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் சில நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. கட்டிடம் தகர்க்கப்பட்டதால் அப்பகுதி மூலமாக புகை மண்டலம் போல காட்சியளித்தது.