அசாமில் 10-ம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது..!
அசாமில் 10-ம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று பொது அறிவியல் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் பொது அறிவியல் வினாத்தாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கசிந்தது. இது தொடர்பாக நேற்று இரவு இடைநிலை கல்வி வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நடைபெற இருந்த பொது அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வினாத்தாள் கசிவுக்கு யார் காரணம்? அதன் பின்னணியில் யார்-யார் உள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அசாம் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட குறைந்தது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி மந்திரி ரனோஜ் பெகு தெரிவித்துள்ளார். மேலும், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி, வடக்கு லக்கிம்பூர், தேமாஜி, சதியா, திப்ருகார் மற்றும் தின்சுகியா ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் காவல்துறை தலைமை இயக்குநர் ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தின்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வினாத்தாள் கசிவு மற்றும் சதிகாரர்களின் வலைப்பின்னலை வெளிக்கொணர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.