உத்தரகாசி: சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்பட வாய்ப்பு

தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.;

Update: 2023-11-22 05:35 GMT

உத்தரகாசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4½ கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை பணியின்போது விபத்து ஏற்பட்டது.

கடந்த 12-ந் தேதி சாலைப்பணிகள் நடந்து கொண்டு இருந்தபோது சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இன்று 11-வது நாளாக தொடருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 48 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் மட்டுமே தோண்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைத்த சத்தாண உணவு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதியாகி இருப்பதால் மீட்பு பணி வேகம் எடுத்துள்ளது. தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை இன்றும் தொடர்ந்து 3-வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு மீட்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைத்த சத்தாண உணவு விநியோகம், மருந்து பொருட்கள் வழங்குவது குறித்தும் மத்திய அமைப்பு, சர்வதேச வல்லுநர் உதவியுடன் நடக்கும் மீட்புப்பணி பற்றியும் தெரிவிக்கப்பட்டதாக புஷ்கர் சிங் கூறியுள்ளார். மீட்புப்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதாக முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்