குஜராத்தில் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி
குஜராத்தில் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் கிருஷ்ணா சாஹர் ஏரி உள்ளது. நேற்று மதியம் உள்ளூரை சேர்ந்த 5 சிறுவர்கள் அந்த ஏரிக்கு குளிக்க சென்றனர். அவர்களில் 3 சிறுவர்கள் கரையில் நின்றிருந்த சமயத்தில், 2 சிறுவர்கள் மட்டும் ஏரியில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கினர்.
இதை பார்த்து பதறிப்போன கரையில் நின்றிருந்த சிறுவர்கள் 3 பேரும் தங்களின் நண்பர்களை காப்பாற்றுவதற்காக ஏரிக்குள் குதித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் ஏரியில் மூழ்கினர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதனை தொடர்ந்து நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஏரியில் மூழ்கிய சிறுவர்களை தேடும் பணி நடந்தது.
சுமார் 45 நிமிட தேடுதல் வேட்டைக்கு பின் சிறுவர்கள் 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த சிறுவர்கள் 5 பேரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிப்பதற்காக ஏரிக்கு சென்ற 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.