தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.;
பெரும்பாவூர்,
திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாது சில சம்பவங்களும் நடந்து உள்ளது.
கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை. நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.