அயோத்தியில் கட்டப்படும் மசூதியுடன் ஆஸ்பத்திரி கட்டும் திட்டம் நிறுத்திவைப்பு

நிதி பற்றாக்குறை காரணமாக அயோத்தியில் கட்டப்படும் மசூதியுடன் ஆஸ்பத்திரி கட்டும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

Update: 2023-07-16 21:25 GMT

கோப்புப்படம்

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு இடம் வழங்கவும் உத்தரவிட்டது. அதன்படி அயோத்தியின் தண்ணிபூரில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் மசூதியுடன், ஆஸ்பத்திரி மற்றும் சமூக சமையலறையும் கட்டுவதற்கு உத்தரபிரதேச வக்பு வாரியம் முடிவு செய்தது. இதற்காக இந்தோ-இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

இதில் முதலில் ஆஸ்பத்திரி மற்றும் சமையலறை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஆஸ்பத்திரி கட்டும் திட்டத்தை தள்ளி வைப்பதாக அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

இது குறித்து அறக்கட்டளை செயலாளர் அக்பர் உசேன் கூறுகையில், 'நிதி பற்றாக்குறை காரணமாக ஆஸ்பத்திரி கட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். கடினமான சூழல் இருந்தபோதும், நாங்கள் அதை கைவிடவில்லை. மாறாக திட்டத்தை மாற்றியுள்ளோம். இந்த மொத்த திட்டத்தையும் சிறு சிறு திட்டங்களாக செய்து முடிப்போம்' என தெரிவித்தார். மசூதி கட்டுவதற்கு குறைவான பணமே தேவைப்படும் என்பதால் முதலில் அது கட்டப்படும் எனக்கூறிய அவர், மசூதிக்கான புதிய வரைபடம் ஒன்றை அயோத்தி வளர்ச்சி ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்