பிரதமர் மோடியின் உடை குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் கீர்த்தி ஆசாத்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத், பிரதமர் மோடியின் உடை குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.;
புதுடெல்லி,
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மக்களவை எம்பியுமான கீர்த்தி ஆசாத், பிரதமர் மோடி மேகாலயாவின் பாரம்பரிய பழங்குடியினரின் உடை அணிந்திருந்ததை பெண்களின் உடையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேகாலயாவின் கலாச்சாரத்தை கீர்த்தி ஆசாத் அவமதிப்பதாகவும், மாநிலத்தின் பழங்குடியினரின் உடையை கேலி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், கீர்த்தி ஆசாத்தின் கருத்துகளை திரிணாமுல் காங்கிரஸ் ஆமோதிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் உடை குறித்து கருத்து தெரிவித்ததற்கு கீர்த்தி ஆசாத் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய சமீபத்திய டுவீட் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நம்முடைய பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மீது மரியாதையும் பெருமையும் வேண்டும். எனது கருத்து காரணமாக ஏற்பட்ட காயத்திற்கு வருந்துகிறேன். நமது அரசியலமைப்பு விழுமியங்களை எப்பொழுதும் நிலைநிறுத்தப் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறேன்
மக்களால் எழுப்பப்படும் கவலைகளைப் பற்றி சிந்தித்து, ஒவ்வொரு அடியிலும் நமது அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்குப் பணிபுரிவேன் என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறேன். திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு பின்னணியில் உள்ள மக்களை எப்போதும் மதித்து வருகிறது. நமது தலைவர்கள் பின்பற்றும் மதிப்புகளை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
கட்சியின் சிப்பாய் என்ற முறையில், நமது பன்முகத்தன்மையை மதிக்கவும், பெருமைப்படுத்தவும் அழைக்கும் நமது அரசியலமைப்பு வகுத்துள்ள பாதையை நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். அந்த பாதையில் இருந்து கவனக்குறைவாக விலகுவது போல் தோன்றும் எந்த செயலும் வருந்தத்தக்கது.
இவ்வாறு கூறியுள்ளார்.