திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அல்ல, அது ஒரு தனியார் நிறுவனம்: சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்தவர்கள், உறவினர்களை காசோலைக்காக கொல்கத்தா வரும்படி மம்தா பானர்ஜி கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.;

Update: 2023-06-06 13:36 GMT

கொல்கத்தா,

ஒடிசாவின் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவில் நடந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் சதி திட்டம் இருக்க கூடும் என்று பா.ஜ.க. கூறி வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான, பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி இன்று கூறும்போது, ஒடிசா ரெயில் விபத்துக்கு பின்னணியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ், 2 ரெயில்வே அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடலை தனது டுவிட்டரில் ஆடியோ பதிவாக வெளியிட்டார். இதனை குறிப்பிட்டு, இரண்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடல்கள் எப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவேந்து கூறியுள்ளார்.

சம்பவம் ஒடிசாவில் நடந்தபோதும், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டுவது பற்றியும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு அக்கட்சி எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, சுவேந்து கூறுவதில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. சி.பி.ஐ.க்கு நாங்கள் பயப்படவில்லை. கடந்த காலத்தில், அமலாக்க துறை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அபிசேக் பானர்ஜி பதிலளித்து உள்ளார் என கூறினார்.

இந்நிலையில், சுவேந்து அதிகாரி கூறும்போது, ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நேதாஜி உள்ளரங்க மைதானத்திற்கு நாளை வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஏனென்றால், மம்தா பானர்ஜி அவர்கள் முன்னிலையில் நாளை உரையாற்றி, காயமடைந்த நபர்களுக்கும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் காசோலைகளை வழங்குவார். அவர்களை கொல்கத்தா வரும்படி கூறியிருப்பது வெட்கக்கேடானது.

விபத்து அதிர்ச்சியில் இருந்து கூட அவர்கள் இன்னும் மீண்டு வெளியே வரவில்லை என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ், ஒரு கட்சியே இல்லை.

அது ஒரு தனியார் நிறுவனம். மம்தா பானர்ஜி அதன் தலைவர். அபிசேக் பானர்ஜி அதன் மேலாண் இயக்குனர். சவுகதா ராய் அந்நிறுவனத்தின் ஓர் ஊழியர். அதன் உரிமையாளரை நான் தோற்கடித்து விட்டேன் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்