போக்குவரத்து ஊழியர்கள் இன்று போராட்டம்; கர்நாடகத்தில் அரசு பஸ்கள் இயங்குமா?

சம்பள உயர்வு, பணி நீக்கத்தை ரத்து செய்ய கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் இன்று அரசு பஸ்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2023-01-23 18:45 GMT

பெங்களூரு:

போக்குவரத்து ஊழியர்கள்

கர்நாடகம் முழுவதும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் சுமார் 24 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுபோல் பெங்களூரு மாநகரில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் 7 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பலரை கர்நாடக அரசு பணி நீக்கம் செய்தது. மேலும் தனியார் பஸ் டிரைவர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்கியது. அதையடுத்து அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பள உயர்வு, பணி நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை அப்போதைய மந்திரி லட்சுமண சவதி உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் கைவிட்டனர்.

இன்று போராட்டம்

ஆனால் 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் போக்குவரத்து ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையே கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சம்பள உயர்வு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஊழியர்கள் மாநிலம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

1.30 லட்சம் ஊழியர்கள்

மாநிலம் முழுவதும் கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.30 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இன்று அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் தலைநகர் உள்பட கர்நாடகம் முழுவதும் அரசு பஸ்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பாதிப்பு இருக்காது

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் நாளை (இன்று) தர்ணா போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர். ஆனால் அரசு பஸ்களின் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும். அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஊதியம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு அவர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். 6 ஆண்டுகள் ஆகியும் சம்பள விகிதம் மாற்றி அமைக்காமல் உள்ளதால், ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்