கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு பயிற்சி
கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
பட்டமளிப்பு விழா
தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவன (நிமான்ஸ் ஆஸ்பத்திரி) 26-வது பட்டமளிப்பு விழா அந்த ஆஸ்பத்திரியில் மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் 'இ-மனஸ்' திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனநல சுகாதார நடவடிக்கைகள் நிர்வாகிக்கப்படுகின்றன. இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது. நரம்பு தொடர்பான நோய்கள் நாட்டின் வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் மூளை சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம்
இந்த திட்டத்தின்படி தொடக்க நிலை மற்றும் 2-ம் நிலை அரசு ஆஸ்பத்திரிகளில் மனநல சுகாதார சேவைக்காக வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டங்களால் மனநல சுகாதாரத்தை காப்பதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. கர்நாடக திட்டத்தை அடிப்படையாக வைத்து மத்திய அரசு 'டி-மனஸ்' திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
மனநல சுகாதாரம் குறித்து நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் விவாதிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதுடன் மனநல சுகாதாரமும் நன்றாக இருக்க வேண்டும். சமீபகாலமாக பொதுமக்கள் மனநல சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டும் சமநிலையில் நன்றாக இருக்க வேண்டும்.
தொலை மனநல சுகாதாரம்
கொரோனா பரவல் நேரத்தில் நிமான்ஸ் ஆஸ்பத்திரி சிறப்பான முறையில் பணியாற்றியது. கொரோனா பரவலின்போது பொதுமக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாயினர். இந்த மன அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நிமான்சுடன் சுகாதாரத்துறை இணைந்து தொலை ஆலோசனை (டெலி கன்சல்டேசன்) தொடங்கினோம். அதாவது தொலைபேசி மூலம் மக்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
இதுவரை 23 லட்சம் அழைப்புகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நாங்கள் தொலை மனநல சுகாதாரம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். அதன்படி கர்நாடகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கும் மனநல சுகாதாரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் பருவ வாழ்க்கையை விட பணியிட வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. புதிய ஆலோசனைகளுக்கு மனதை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் நல்ல மனநல சுகாதார சேவை கிடைக்க தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு சுதாகர் பேசினார்.