மராட்டியத்தில் துயர சம்பவம்: கோவில் கொட்டகை மீது மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி - 37 பேர் படுகாயம்

மராட்டியத்தில் கோவில் கொட்டகை மீது ராட்சத வேப்ப மரம் விழுந்து 7 பக்தர்கள் பலியானார்கள். 37 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-04-10 20:49 GMT

மும்பை,

சூறைக்காற்றுடன் மழை

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பாரஸ் கிராமத்தில் புகழ்பெற்ற பாபுஜி மகாராஜ் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு திருவிழா நடந்தது. விழாவில் கிராமத்தினர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர்.

கோவிலின் முன்பு பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு உள்ளது. அதன் அருகே 100 ஆண்டுகள் பழமையான ராட்சத வேப்ப மரம் ஒன்று உள்ளது.

இந்தநிலையில் இரவு 7.30 மணியளவில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மேலும் சூறைக்காற்றும் பயங்கரமாக வீசியது. எனவே பக்தர்கள் சுமார் 50 பேர் மழையில் நனையாமல் இருக்க அந்த தகர கொட்டகையின் கீழ் தஞ்சம் புகுந்தனர்.

பழமையான மரம் விழுந்தது

அப்போது, சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த ராட்சத வேப்ப மரம் வேரோடு சரிந்து பக்தர்கள் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த தகர கொட்டகை மீது விழுந்து அமுக்கியது. இதனால் கொட்டகையில் இருந்த சுமார் 50 பக்தர்கள் மரத்தின் கீழ் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். பலத்த மழை, சூறாவளி காற்று காரணமாக மரத்தின் கீழ் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து சென்றனர்.

அவர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கொட்டகை மேல் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். மேலும் மரம் விழுந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

7 பேர் பலி

இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்கள் அகோலா, புல்தானா, ஜல்காவ் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். படுகாயமடைந்த 37 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரம் விழுந்து 7 பக்தர்கள் பலியான சம்பவம் மராட்டியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்