பீகாரில் சோகம்; ராணுவ பயிற்சியில் பீரங்கி குண்டு தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
பீகாரில் ராணுவ பயிற்சியில் பீரங்கி குண்டு தாக்கி ஒரே குடும்பத்தில் உள்ள 3 பேர் பலியானதுடன் பலர் காயம் அடைந்து உள்ளனர்.;
கயா,
பீகாரின் கயா மாவட்டத்தில் குலார் பெட் கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற தயாராக இருந்தன. இந்நிலையில், இன்று காலை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது. இதில், துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை சுட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில், பீரங்கி குண்டு தாக்கியதில் ஒரே குடும்பத்தில் உள்ள 3 பேர் பலியான சோக சம்பவம் நடந்து உள்ளது. அத்துடன் 6 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும், போலீஸ் அதிகாரிகளும், உள்ளூர் நிர்வாகத்தினரும் அந்த பகுதிக்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த பயிற்சியின்போது, துப்பாக்கி சூடு பயிற்சி தளத்திற்கு உட்பட்ட பகுதியை கடந்து, இந்த கிராமத்திற்கு அடுத்திருந்த வேறு சில கிராமங்களுக்கும் சென்று பீரங்கி குண்டுகள் விழுந்து உள்ளன என கூறப்படுகிறது. இதனால், ஹோலி பண்டிகை கொண்டாட இருந்த அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.