காரின் மேற்கூரையில் அமர்ந்து பட்டாசு வெடித்த நபர்களுக்கு நேர்ந்த சோகம்; வைரலான வீடியோ

குஜராத்தில் காரின் மேற்கூரையில் அமர்ந்து பட்டாசு வெடித்த நபர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-10-27 13:33 GMT



ஆமதாபாத்,


குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி சிலர் கும்பலாக கார் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றுள்ளனர். கார் இரவில் மெதுவாக நகர்ந்து செல்லும்போது, காரின் மேலே இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தபடி சென்றுள்ளனர்.

சிலர் காரின் முன்பகுதியில் அமர்ந்தபடியும் சென்றுள்ளனர். இந்த வீடியோவை ஆமதாபாத் போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன், நகர சாலை பகுதிகளில் அமளியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவர்களது செயல்கள் மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என்ற அடிப்படையில் தெருக்களிலேயே அவர்களை போலீசார் தோப்பு கரணம் போடும்படி கூறினர். முடிவில் அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலான சூழலில், 3.3 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். போலீசாருக்கு பலரும் தங்களது கடமையை உடனடியாக செய்ததற்காகவும், சட்டம் ஒழுங்கை பராமரித்ததற்காகவும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்