அரியானா: டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து 4 பேர் பலி
ராஜஸ்தான் நோக்கி பக்தர்கள் பயணித்த டிராக்டர் டிரெய்லரின் கொக்கி கழன்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.;
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் டிராக்டரில் சிலர் கோவிலுக்கு சென்றபோது திடீரென டிரைலர் கொக்கி கழன்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோகமேடில் இருக்கும் கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் சிலர் டிராக்டரில் சென்றுகொண்டிருந்தனர். அரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அருகே சென்றபோது டிராக்டரையும் டிரெய்லரையும் இணைக்கும் கொக்கி திடீரென கழன்றுவிட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 18 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பக்தர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டம், பட்ரான் அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.