27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் தலைவர் சடலமாக மீட்பு!
மாவோயிஸ்ட் தலைவரான சந்தீப் யாதவ் என்பவர் பீகார் மாநிலம் கயா பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.;
பாட்னா,
27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் தலைவரான சந்தீப் யாதவ்(55) என்பவர் பீகார் மாநிலம் கயா பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
விஜய் யாதவ் என்றழைக்கப்படும் சந்தீப் நேற்று (புதன்கிழமை) மாலை, கயாவின் லுடுவா வனப்பகுதியில் இறந்து கிடந்தார். இந்த நிலையில், அவரது உடலை சிஆர்பிஎப் குழுவினர் நேற்று கண்டுபிடித்தனர். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கயா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விஜய் யாதவ் பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.
1990களில் இருந்து அவர் சிபிஐ (மாவோயிஸ்ட்) இன் மத்திய மண்டலத்தின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர். அவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 27 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தார்.
அவரை உயிருடனோ அல்லது சடலமாகவோ பிடித்து கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு என்று ஜார்கண்ட் அரசு அறிவித்திருந்தது. மேலும், அவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு பீகார் அரசு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.