காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளியால் ஜெக்தீப் தன்கர் வேதனை

மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் எதிர்பாராதது, வெட்கக்கேடானது, வேதனை மிகுந்தது என்று ஜெக்தீப் தன்கர் தெரிவித்தார்.;

Update: 2024-02-10 22:38 GMT

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்காக சரண் சிங்கின் பேரனும், ராஷ்ட்ரீய லோக்தள தலைவருமான ஜெயந்த் சிங்கை பேச அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஜெயந்த் சிங்குக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டார். இதனால் கோபமடைந்த ஜெக்தீப் தன்கர், ஜெய்ராம் ரமேசை அவைக்கு தகுதியற்றவர் என தெரிவித்தார். மேலும் மயானத்தில் விருந்து வைப்பவர் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், அவையில் நேரம் ஒதுக்குவது தொடர்பாக ஜெக்தீப் தன்கர் மீது அதிருப்தி வெளியிட்டார்.

பின்னர் பேசிய தன்கர், உறுப்பினர்களின் செயல்பாடுகள் எதிர்பாராதது, வெட்கக்கேடானது, வேதனை மிகுந்தது என வர்ணித்தார்.

எம்.பி.க்களின் நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமாக இருப்பதாக கூறிய தன்கர், தனது மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றுவதாகவும், பதவியில் இருந்து விலகவும் கூட நினைத்ததாகவும் வேதனையை பதிவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்