நாடு முழுவதும் 75 சதவீத பொது இடங்களில் கழிவறை வசதி: அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி இந்த அறிக்கையை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் வழிபாட்டு தலங்கள், கடைத்தெருக்கள், ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடிகள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிவறை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 85,872 மேற்படி பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி இந்த அறிக்கையை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதும் 74.6 சதவீத பொது இடங்களில் கழிவறை வசதி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 84.2 சதவீத இடங்களில் குறைவான குப்பைகளும், 93.1 சதவீத பகுதிகளில் குறைவான கழிவுநீர் தேங்குவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதைப்போல 95.4 சதவீத கிராமப்புற வீடுகள் கழிவறைகளை கொண்டிருக்கின்றன. 70.2 சதவீத வீடுகள் திடக்கழிவு வெளியேற்றும் வசதிகளை கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
17.539 கிராமங்களில் நடத்திய ஆய்வில் 35.2 சதவீத கிராமங்களில் திடக்கழிவுகளை பிரித்தெடுக்க பொது இடங்களும், 35.7 சதவீத கிராமங்களில் பொதுவான கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள், 32.9 சதவீத கிராமங்களில வீடுதோறும் சென்று குப்பை சேகரிக்கும் வசதி உள்ளிட்டவை இருப்பதும் தெரியவந்துள்ளது.