"இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்"- மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று அவை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார். தொடர்ந்து அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
"இன்றைய நாள் மறக்க முடியாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. இன்று மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் விவாதத்திற்குப் பிறகு, அது மாநிலங்களவைக்கும் வரும். இன்று நாம் பெண்கள் அதிகாரமளிக்கும் நோக்கில் ஒரு முக்கியமான அடி எடுத்து வைக்கிறோம்.
கூட்டாட்சி அமைப்பு இந்தியாவின் சக்தியை உலகில் முன் வைத்தது, உலகையே கவர்ந்தது. ஜி 20 மாநாட்டின் போது, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கூட்டங்கள் நடந்தன. ஒவ்வொரு மாநிலமும் மிகுந்த ஆர்வத்துடன், விருந்தோம்பல் மூலம் உலகைக் கவர்ந்தனர். இது நமது கூட்டாட்சிக் கட்டமைப்பின் சக்தி." இவ்வாறு பிரதமர் பேசினார்.