கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆரூடம்
கா்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் நடக்க உள்ளதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சிக்கமகளூரு;
சட்டசபை தேர்தல்
சிக்கமகளூருவில் நேற்றுமுன்தினம் தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்கு முன்பாக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
முதலில் நடக்கும் 2 மாநிலத்திலும் அதிகப்படியான இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெறும். மேலும் கர்நாடக மாநிலத்திலும் அதிகப்படியான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
கால அவகாசம்
பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் அனைவரும் நிரந்தரமாக களப்பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மற்ற கட்சியினர் தேர்தல் வந்துவிட்டால் மட்டும் அவர்களுடைய பிரச்சாரத்தை காண்பித்து பெருமை தேடிக் கொள்வார்கள். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை ேசர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் திறம்பட செயல்பட்டு அந்த தொகுதியில் வளர்ச்சி பணி செய்துள்ளனர்.
ஆட்சியின் கால அவகாசம் வரை பசவராஜ் பொம்மை நிரந்தரமாக முடித்து பின்னர் தேர்தலை சந்திக்க உள்ளோம். அதேபோல எவ்வாறு நாம் வேலை செய்கிறோமோ அதற்கு தகுந்தாற் போல மக்களும் மீண்டும் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுப்பார்கள். பா.ஜனதா கட்சி 100 சதவீதம் கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினாா்.