பாக்கு வியாபாரியிடம் நூதனமுறையில் ரூ.50 ஆயிரம் பறிப்பு

பாக்கு வியாபாரியிடம் நூதனமுறையில் ரூ.50 ஆயிரம் பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2022-10-16 19:00 GMT

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி புறநகர் பகுதியில் பாக்கு கடை வைத்திருப்பவர் முகமது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகமதுவிடம் பேச்சு கொடுத்தனர்.

அப்போது அவர் மஞ்சள் கரை படிந்த ரூ.500 நோட்டை காண்பித்து, இதேபோல நோட்டு இருந்தால் கொடுங்கள், அதற்கு பதிலாக பணம் இரட்டிப்பாக கொடுப்பதாக கூறினர். அதை வாங்கி பார்த்த முகமது தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, இந்த நோட்டுகளில் மஞ்சள் கரை இருந்தால் அதனை எடுத்து கொண்டு மீதி பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளார்.

அந்த பணத்தை வாங்கி மர்ம நபர்கள் தங்கள் கையில் இருந்த மயக்க மருந்து பொடியை முகமதுவின் முகத்தில் வீசினர். இதில் நிலை தடுமாறிய அவர் மயங்கி கீழே விழுந்ததும், அந்த பணத்துடன் 2 பேரும் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் உடனே இதுகுறித்து உப்பினங்கடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்