சித்ரதுர்கா மடாதிபதி மீதான வழக்கை விசாரிக்க போலீசாருக்கு முழு சுதந்திரம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பாலியல் புகாரில் கைதான சித்ரதுர்கா மடாதிபதி மீதான வழக்கை விசாரிக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் வழக்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.;
மங்களூரு;
பாலியல் புகார்
சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. பாலியல் புகாரில் சிக்கிய இவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டப்படி நடக்கும்
மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அவர் ஏன் தாமதமாக கைது செய்யப்பட்டார் என்பது பற்றி என்னால் கூற இயலாது. அதுபற்றி நான் கருத்து சொல்லவும் விரும்பவில்லை. இதுபோன்ற பேச்சுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வழக்கில் அனைத்தும் சட்டப்படி நடந்தது.
இனியும் சட்டப்படி நடக்கும். மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு தற்போது 64 வயது ஆகிறது. அவர் மீது முதலில் மைசூரு டவுன் போலீசார் தான் போக்சோ சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
5 பேர்...
லிங்காயத் மடத்தால் நடத்தப்பட்டு வரும் விடுதியில் தங்கி படித்த 2 உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மைசூருவில் உள்ள தனியார் அமைப்பிடம் கூற, அவர்கள் இதுபற்றி மைசூரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.