பிரதமர் மோடி, மம்தா வெளிநாட்டு பயணங்கள்: பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல்

பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

Update: 2023-09-24 20:17 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஸ்பெயின் மற்றும் துபாய் நாடுகளில் 12 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் கொல்கத்தா திரும்பினார்.

மம்தாவின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி, "மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு அபாயகரமான அளவில் இருந்தபோது, அதை பற்றி கவலைப்படாமல் முதல்-மந்திரி வெளிநாட்டிற்கு விடுமுறை எடுத்து சென்றார். அவர் எந்த பயனும் இல்லாத வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பியபோது, இங்கு டெங்கு நிலைமை மோசமாகிவிட்டது" என தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து கடுமையாக விமர்சித்தது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோடியை விட மம்தா மிகவும் நம்பகமானவர். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களை தொடங்கினார். அவர் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார், ஆனால் மணிப்பூருக்கு ஒரு முறை கூட செல்ல நினைக்கவில்லை. எந்த தலைவர் நம்பகமானவர், யார் நம்பத்தகுந்தவர் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுவேந்து அதிகாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வெளிநாட்டு பயணங்களோடு பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களை ஒப்பிட்டு பேசுபவர்களுக்கு இரண்டுக்குமான வித்தியாசத்தை சொல்கிறேன். அவருடைய(மோடி) வியூகப் பயணங்கள் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் முதல்-மந்திரியின்(மம்தா) பயணம் முற்றிலும் ஊழல் நிறைந்தது" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்