பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

நெய்யில் விலங்கு கொழுப்பை கலந்துவிட்டதாக அரசியல் உள்நோக்கத்துடன் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறி உள்ளார்.;

Update: 2024-09-25 13:09 GMT

அமராவதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்ததாகவும், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாகவும் வெளியான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசாங்கம் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலைக் கூட விட்டுவைக்கவில்லை என்றும், லட்டு தயாரிப்பதற்கு தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியது என்றும், ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன்மூலம் சந்திரபாபு நாயுடு பாவம் செய்துவிட்டதாகவும், இதற்கு பிராயச்சித்தமாக வரும் 28-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

"லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பை கலந்துவிட்டதாக அரசியல் உள்நோக்கத்துடன் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்படவில்லை என்றபோதிலும், அது நடந்ததாக வேண்டுமென்றே பொய் சொல்லி, பக்தர்கள் சாப்பிட்டதாக பொய் பிரசாரம் செய்தார்' என ஜெகன் மோகன் ரெட்டி கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்