திருப்பதி தேவஸ்தான செல்போன் செயலியை 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம்

ஏழுமலையான் பக்தர்கள் தங்களது செல்போன் செயலி மூலமாகவே தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Update: 2023-01-29 09:28 GMT

திருப்பதி,

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக ttd devasthanam mobile app எனும் மொபைல் செயலியை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது.

இந்த மொபைல் செயலி மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் தங்களது செல்போன் செயலி மூலமாகவே தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது.

புதிய மொபைல் செயலியை திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி அறிமுகப்படுத்தினார். இந்த செயலியை பக்தர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலம் அனைத்து முன்பதிவு தரிசனம், தங்குமிடம் முன்பதிவு, குலுக்கல் முறை தரிசனம், தற்போதைய திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என அனைத்து வசதிகளும் செல்போன் செயலியில் உள்ளதால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர்.

இதனால் செயலி வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பக்தர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான ஐடி நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த செயலி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.

திருப்பதியில் நேற்று 80,094 பேர் தரிசனம் செய்தனர். 32,219 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

 

Tags:    

மேலும் செய்திகள்