திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நாளை தேரோட்டம்: நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை
தேரோட்டத்தை முன்னிட்டு நாளை திருநள்ளாறு, நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவிலில், வருகிற டிசம்பர் 20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரமோற்சவ விழாவும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாளை தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை திருநள்ளாறு, நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேற்று முன்தினம் சனீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்தர்கள் செல்லும் வரிசை வளாகம், அவர்களுக்கான, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார். மேலும், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்கும் இடத்தை, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.