நடிகர் துனியா விஜய் விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம்
பானிபூரி கிட்டியுடன் தகராறு செய்த வழக்கு தொடர்பாக நடிகர் துனியா விஜய் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருநது வருபவர் துனியா விஜய். இவருக்கும், பானிபூரி கிட்டிக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து தகராறு நடந்தது. நடிகர் துனியா விஜயை, பானிபூரி கிட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் பானிபூரி கிட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதுபோல், நடிகர் துனியா விஜயிடமும் சம்பவம் குறித்து விசாரித்து தகவல்களை பெற போலீசார் முடிவு செய்தனர். இதற்கான விசாரணைக்கு ஆஜராகும்படி துனியா விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகர் துனியா விஜய் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால், விசரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் அளிக்கும்படி போலீசாரிடம், நடிகர் துனியா விஜய் கேட்டுள்ளார். அதன்படி, போலீசாரும், அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக துனியா விஜய்க்கு அனுமதி வழங்கி உள்ளனர்.