பந்திப்பூர் வன காப்பகத்தில் 126 புலிகள் உள்ளன; இயக்குனர் ரமேஷ்குமார் தகவல்
பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தில் 126 புலிகள் உள்ளதாக காப்பகத்தின் இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:
பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தில் 126 புலிகள் உள்ளதாக காப்பகத்தின் இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டு கொண்டாட்டம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி தேசிய புலிகள் காப்பகமாகவும் உள்ளது. இங்கு அதிகமான புலிகள் வசித்து வருகின்றன. புலிகள் எண்ணிக்கை குறைந்து வந்ததால், அவற்றின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசிய புலிகள் காப்பக திட்டத்தை கடந்த 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கினார்.
அப்போது பந்திப்பூர் வனப்பகுதியும் தேசிய புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. இந்த திட்டத்துக்கு பிறகு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 50-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி பந்திப்பூருக்கு வருகிறார். இதையொட்டி வருகிற 8 மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பந்திப்பூருக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
126 புலிகள்
இதுகுறித்து பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பக ரமேஷ்குமார் கூறுகையில், பந்திப்பூரில் புலிகள் காப்பகம் தொடங்கும்போது வெறும் 12 புலிகள் தான் இருந்தன. தற்போது அந்த புலிகள் எண்ணிக்கை 126 ஆக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தில் 126 புலிகளும், பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் வசிக்கும் புலிகளையும் சேர்த்து மொத்ததம் 173 புலிகள் இருப்பதாகவும் தெரிவந்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) நடந்த புலிகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கை விரைவில் ெவளியிடப்படும். பந்திப்பூர் புலிகள் காப்பகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.