துப்பாக்கி முனையில் வியாபாரிகளை மிரட்டி தங்கநகைகள் பறித்த கும்பல்-2 பேரை பிடித்து மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

மண்டியா அருகே வியாபாரிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்கநகைகள் பறித்தனர். இதில் 2 பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர்.;

Update: 2022-09-15 18:45 GMT

மண்டியா:

துப்பாக்கி முனையில் மிரட்டி...

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பண்னேபுட்டா கிராமத்தில் தங்கநகை வியாபாரிகள் 2 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்தின் அருகே வந்தபோது மற்றொரு காரில் இருந்த8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.

பின்னர் அவர்கள், காரில் இருந்த 2 வியாபாரிகளையும் துப்பாக்கி காண்பித்து மிரட்டி தங்க நகைகளை தரும்படி கேட்டனர். ஆனால் வியாபாரிகள் நகைகளை கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் 2 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.

2 பேர் கைது

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், 8 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது பொதுமக்களுக்கும், கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை சுதாரித்து கொண்ட கும்பல், வியாபாரிகளின் கையில் இருந்த நகைகளை பறித்து கொண்டு தப்பியோடினர். ஆனாலும் பொதுமக்கள் விடாமல் அவர்களை துரத்தி 2 பேரை பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பியோடிவிட்டனர். பின்னர் பிடிபட்ட 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள் பாண்டவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் வழிப்பறி கொள்ளையர்களான நிஷத் மற்றும் ரஞ்சீத் என்று தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடி தலைமறைவான 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்