3 மாத கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பை துண்டிப்பதா?-பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

3 மாதம் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பை ரத்து செய்வதாக பெஸ்காம் அறிவித்து உள்ளதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-23 22:03 GMT

8 மாவட்டங்களுக்கு....

பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) சார்பில் பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, துமகூரு, சித்ரதுர்கா, ராமநகர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட 8 மாவட்டங்களில் 41 ஆயிரத்து 42 சதுர கிலோ மீட்டருக்கு பெஸ்காம் சார்பில் மின்வினியோகம் கொடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு நகரில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்கள், ஓட்டல்கள், வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு பெஸ்காம் மின்சாரம் வினியோகித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பெஸ்காம் ஊழியர்கள் மின்சார இணைப்பு பெட்டிகளில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கெடுத்து கட்டணத்தை நிர்ணயித்து செல்கின்றனர். அந்த கட்டணத்தை மின்நுகர்வோர் மீட்டர் கட்டணம் கணக்கிட்ட 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இணைப்பை துண்டிக்க முடிவு

ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் மின்கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு அடுத்த மாத தொகையுடன் சேர்த்து பெஸ்காம் வட்டி வசூலித்து வருகிறது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் மின்கட்டணம் சரியாக செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் பெஸ்காம் நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனை சரிசெய்ய பெஸ்காம் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பி.டி.ஏ., மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய ரூ.236 கோடி மின்கட்டண பாக்கியை செலுத்த கோரி பெஸ்காம் நோட்டீசு அனுப்பி இருந்தது.

பொதுவாக தொடர்ந்து 2 மாதங்கள் மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால், மின்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு வந்து மின் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். அதாவது பீஸ் கேரியரை பிடுங்கி எடுத்து செல்வார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய உடனேயே மீண்டும் பீஸ் கேரியரை பொருத்தி மின் வினியோகத்தை வழங்குவார்கள். இந்த நிலையில் மின் நுகர்வோர், தொடர்ந்து 3 மாதங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க பெஸ்காம் முடிவு செய்து உள்ளது.

மக்கள் எதிர்ப்பு

இதுகுறித்து பெஸ்காம் நிர்வாக இயக்குர் மகாந்தேஷ் பீலகி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மின் நுகர்வோர், 3 மாதங்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்த தவறினால் மின் இணைப்புக்கு போடப்பட்ட ஒப்பந்தம் அதாவது மின் இணைப்பு ரத்து செய்யப்படும்.

அவ்வாறு அனுமதி ரத்து செய்யப்பட்ட பிறகு மின் இணைப்பு வேண்டுமென்றால் மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரி புதியதாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பெஸ்காமின் இந்த முடிவுக்கு மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

ஏழை மக்களுக்கு அழுத்தம்

பெங்களூரு சி.வி.ராமன் நகர் ஒய்சாலா வார்டில் வசித்து வரும் சாந்தா சின்னராஜ் ஜோன்ஸ், "கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்போது தான் மக்கள் கொரோனா தந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். இப்போதும் நிறைய பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 3 மாதம் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று பெஸ்காம் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்றால் வேறு துறையின் மூலம் ஈட்டி கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு பெஸ்காம் மூலம் வசூலிக்க நினைப்பது தவறு. பெஸ்காமின் இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம். இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்றார்.

அலைய வேண்டும்

சிவாஜிநகரில் வசித்து வரும் சமூக ஆர்வலர் நெல்சன், "3 மாதங்கள் தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு ரத்து செய்யப்படும் என்று பெஸ்காம் கூறியுள்ளது. பெஸ்காமுக்கு அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய பாக்கியே கோடிக்கணக்கில் உள்ளது. முதலில் அவர்களிடம், பெஸ்காம் மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். பெஸ்காமின் அறிவிப்பு ஏழை, நடுத்தர மக்களை மிரட்டும் வகையில் உள்ளது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து மின்இணைப்பை துண்டிக்கும் செயல் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல" என்றார்.

பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திபெலேயில் வசித்து வரும் சுசீலா, "3 மாதங்கள் தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு ரத்து செய்யப்படும் என்று பெஸ்காம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாக அடிக்கடி மின்கட்டணத்தை ஏற்றி வருகின்றனர். 3 மாதங்கள் தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பை துண்டிப்பதற்கு பதில் மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கலாம். அதைவிட்டுவிட்டு மின்இணைப்பை துண்டிப்போம் என்று கூறுவது சரியல்ல. ஒரு முறை மின்இணைப்பை துண்டித்து விட்டால் மீண்டும் மின்இணைப்பை பெறுவது கடினம். இதற்காக வேலையை விட்டுவிட்டு பெஸ்காம் அலுவலகத்திற்கு அலைந்து திரிய வேண்டும். இதனால் மின்இணைப்பை துண்டிக்கும் முடிவை கைவிட வேண்டும்" என்றார்.

இருளில் தள்ள....

பாரதிநகர் வார்டு காங்கிரஸ் தலைவர் சுரேஷ், "அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொந்தரவு கொடுத்து வருகின்றன. இதனால் மக்கள் அதிகம் பாதித்து உள்ளனர். பாரதிநகர் பகுதியில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தான் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒரு மாதம் மின்கட்டணம் செலுத்த முடியாவிட்டால் கூட அடுத்த மாதம் சேர்த்து மின்கட்டணத்தை செலுத்தி விடுவார்கள். மின்கட்டணத்தை கட்ட காலஅவகாசம் கொடுக்க வேண்டும்" என்றார்.

சர்ஜாபுராவில் வசித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் சின்னப்பா சிக்கஹகடே, "பெஸ்காம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. நிதி நெருக்கடியை சரிசெய்ய ஏழை, எளிய மக்களை பெஸ்காம் பலிகடாவாக ஆக்க பார்க்கிறது. மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், கிராம பஞ்சாயத்துகள் செலுத்த வேண்டிய மின்கட்டண தொகை கோடிக்கணக்கில் பாக்கி உள்ளது. முதலில் அவர்களிடம் பெஸ்காம் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அப்படி வசூலித்தால் பெஸ்காம் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்" என்றார்.

சர்ஜாபுராவை சேர்ந்த சீனிவாஸ், "சர்ஜாபுராவில் பல்வேறு இடங்களில் இரவில் மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை. இதனால் இங்கு வழிப்பறி அதிகரித்து உள்ளது. இரவில் மின்விளக்குகளை ஒளிர விடுவதில் முதலில் பெஸ்காம் கவனம் செலுத்த வேண்டும். அதன்பின்னர்

கட்டணம் செலுத்தாதவர்களின் மின்இணைப்பை துண்டிப்பது பற்றி யோசிக்க வேண்டும். அவர்களிடம் வசூலித்தாலே பெஸ்காம் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வரும். மக்கள் வாழ்வில் வெளிச்சம் தர வேண்டிய பெஸ்காம் மக்களை இருளில் தள்ள பார்க்கிறது" என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்