குடும்ப பிரச்சினை: சமாதானம் பேசிய பஞ்சாயத்து துணைத்தலைவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

பஞ்சாயத்து துணைத்தலைவர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Update: 2024-01-13 11:57 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தொடியூர் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் சலீம் மனீல் (வயது 60). இவர் பலொலிகுலங்கரா ஜமாத் தலைவராகவும் (இஸ்லாமிய மத கூட்டமைப்பு) செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, சலீம் நேற்று மாலை தன் அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, குடும்ப பிரச்சினை தொடர்பாக சமாதானம் பேச 2 தரப்பினர் அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளனர். பிரச்சினை தொடர்பாக குடும்பத்தினரிடம் சலீம் மனீல் சமாதானம் பேசியுள்ளார். அப்போது, இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க சலீம் முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சலீம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சலீம் அலுவலக வளாகத்திலேயே சரிந்து விழுந்தார்.

உடனடியாக, அங்கிருந்த ஊழியர்கள் சலீமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சலீமை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்