அவர்கள் சக்தி படைத்தவர்கள்; யாரையும் சிறைக்கு அனுப்புவார்கள்: சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால்
அவர்கள் சக்தி படைத்தவர்கள் என்றும் யாரை வேண்டுமென்றாலும் சிறைக்கு அனுப்புவார்கள் என்றும் சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்ட, டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து, 8 மணி நேரம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தும், பின்னர் அதனை தொடர்ச்சியாக நீட்டித்தும் உத்தரவிட்டது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ந்தேதி விசாரணை நடத்தினர். அதற்கு இரு நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக அமலாக்க துறையும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிசோடியா மற்றும் மற்றவர்கள் மீது சி.பி.ஐ. புதிய எப்.ஐ.ஆர். ஒன்றை கடந்த மார்ச் 20-ந்தேதி பதிவு செய்து உள்ளது. 2015-ம் ஆண்டு டெல்லி அரசு பீட்பேக் யூனிட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி தகவலை சேகரித்தது. இந்த தகவல், டெல்லியில் அமல்படுத்த கூடிய சாத்தியப்பட்ட விசயங்களை கொண்டு இருப்பதுடன், அவை அரசுக்கு உதவ கூடும் என்பதற்காக உருவானது.
ஆனால், தகவல் சேகரிப்பதற்கான இந்த அமைப்பால் அரசு கஜானாவுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என சி.பி.ஐ. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. இதுபோன்று மத்திய முகமைகளால் பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசோடியா விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார்.
இதுபற்றி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில், மணீஷ் சிசோடியா மீது பல பொய்யான வழக்குகளை போட்டு, அவரை நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். நாட்டுக்கு ஏற்பட்டு உள்ள சோகம் என வேதனை வெளியிட்டார்.
இந்த சூழலில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, எங்களுக்கு எதிராக கோர்ட்டில், மதுபான கொள்கை விசாரணையில், மத்திய அமைப்புகள் பொய் கூறுகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களை அவர்கள் சித்ரவதை செய்கின்றனர். எங்களை குற்றவாளியாக்க, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
கெஜ்ரிவால் அரசில் மந்திரியாக உள்ள மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி கெஜ்ரிவால் கூறும்போது, வழக்கில் சிசோடியா மீது, சி.பி.ஐ. அமைப்பு பொய்யாக குற்றம் சாட்டி வருகிறது என தெரிவித்து உள்ளார். பொய்யான வாக்குமூலங்களை பெற அடித்து, துன்புறுத்தப்படுகின்றனர். சான்றுகளை பெற அவர்களுக்கு எதிராக சித்ரவதையில் ஈடுபடுகின்றனர். ஊழலை ஒழிப்பதற்கு இது ஒரு பெரிய கொள்கையாக உள்ளது என கூறியுள்ளார்.
சிசோடியா 14 மொபைல் போன்களை அழித்து விட்டார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால் அமலாக்க துறை தற்போது, அவற்றில் 4 போன்கள் தங்களிடம் உள்ளன என கூறுகிறது. சி.பி.ஐ. அமைப்பு தன்னிடம் ஒரு போன் உள்ளது என கூறுகிறது. அந்த போன்களை அவர் அழித்து விட்டார் என்றால், பின்னர் அவர்கள் (அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்பு) எப்படி அந்த போன்களை பெற முடியும்.
இந்த அமைப்புகள் கோர்ட்டில் பொய் கூறுகின்றன என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார். சி.பி.ஐ. அமைப்பு இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஊழல் பற்றி டெல்லி சட்டசபையில் பேசிய நாளில் இருந்து, சி.பி.ஐ. தனக்கு சம்மன் அனுப்பும் என தெரியும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் சி.பி.ஐ. முன் ஆஜராவார் என ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்மன் பற்றி கெஜ்ரிவால் இன்று காலை வெளியிட்ட வீடியோ ஒன்றில், அவர்கள் (சி.பி.ஐ.) என்னை இன்று அழைத்து உள்ளனர். நிச்சயம் நான் செல்வேன். அவர்கள் சக்தி படைத்தவர்கள். யாரை வேண்டுமென்றாலும் சிறைக்கு அனுப்புவார்கள்.
என்னை கைது செய்யும்படி சி.பி.ஐ.க்கு, பா.ஜ.க. உத்தரவிட்டால், பின்னர் அவர்களது உத்தரவுகளை தெளிவாக சி.பி.ஐ. மேற்கொள்வார்கள் என தெரிவித்து உள்ளார்.
நீங்கள் (பா.ஜ.க.) என்னை ஊழல்வாதி என கூறுகிறீர்கள். நான் வருமான வரி துறையில் ஆணையாளராக பணியாற்றி இருக்கிறேன். நான் விரும்பி இருந்தால் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து இருப்பேன்.
கெஜ்ரிவால் ஊழல் செய்பவர் என்றால், உலகில் நேர்மையானவர் என்று யாரும் இருக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார்.