வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்: சிலுமே நிறுவன அதிகாரிகள் 3 பேர் வீட்டில் போலீசார் சோதனை

வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவன அதிகாரிகள் 3 பேர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தலைமறைவாகி விட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-11-25 22:13 GMT

பெங்களூரு: வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவன அதிகாரிகள் 3 பேர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தலைமறைவாகி விட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வங்கி கணக்கில் ரூ.2 லட்சம்

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து சிலுமே நிறுவனத்தின் மீது அல்சூர்கேட் மற்றும் காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவிக்குமாருக்கும், சிலுமே நிறுவனத்தின் வங்கி கணக்குகளையும் அல்சூர் கேட் போலீசார் ஆய்வு செய்தார்கள்.

அப்போது ரவிக்குமார் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிலுமே நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்டோார் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் வங்கி மூலமாக சம்பளம் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதாவது 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை கையிலேயே ரவிக்குமார் கொடுத்து வந்தது தெரியவந்தது.

நேரிடையாக பண பரிமாற்றம்

வங்கி கணக்குகள் மூலமாக பண பரிமாற்றம் செய்யாமல், அவர் பண பரிமாற்றத்தை நேரிடையாகவே மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இந்த பணம் ரவிக்குமாருக்கு எப்படி கிடைத்தது? அவருக்கு வருமானம் எப்படி வந்தது?, பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் அரசியல் தலைவர்களுடன் உள்ள தொடர்பு குறித்து ரவிக்குமார், லோகேஷ் உள்ளிட்டோர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க மறுத்து வருவதாக கூறப்படுவதால், கைதான 6 பேரிடமும் நேற்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் விசாரித்து தகவல்களை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

3 அதிகாரிகள் வீடுகளில் சோதனை

இந்த நிலையில் ரவிக்குமார் வீட்டில் சிக்கிய மடிக்கணினியை ஆய்வு செய்த போது, சிலுமே நிறுவனத்தில் அதிகாரிகளாக பணியாற்றும் மாருதி, அபிஷேக், அனில் ஆகிய 3 பேருக்கு, நகரில் உள்ள 9 தொகுதிகளில் வாக்காளர்களின் தகவல்களை பெறுவதற்கான பணியை ரவிக்குமார் கொடுத்திருந்தது பற்றிய ஆதாரங்கள் சிக்கி இருந்தது. அந்த 3 பேரும், 9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் ஆய்வை முடித்திருப்பததற்கான தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து பெங்களூருவில் மாருதி, அபிஷேக், அனில் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அல்சூர்கேட் போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது போலீசாருக்கு முக்கிய தகவல்கள், சில ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தலைவமறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்